திருவிழாவின் பன்னிரெண்டு நாட்களில் மிகச்சிறப்பு வாய்ந்த நாளான செவ்வாய் அன்று இரவு கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் மாவிளக்கு, ஆயிரம் கண்பானை, முளைப்பாளிகை போன்றவை எடுத்தல், உருண்டு கொடுத்தல் போன்றவை இரவு பகலாக நடக்கும்.செவ்வாய் அன்று தீச்சட்டி முடிந்தவுடன் இரவு பத்துமணி அளவில் அம்மன் ஊர்க்குள் உலா வந்து வழக்கம் போல் சாவடியில் வைக்கப்படும். அன்று மண்டகப்படிதாரர்கள் பூஜை
முடிந்தவுடன் இரவு 2.00 மணிக்குள் மேளதாளத்துடன் நாட்டாண்மைக்கு அருள் இறக்கப்படும்.அருள் வந்து நாட்டாண்மை கரகச் செம்பை எடுத்து அருகில் இருக்கும் பூசாரியின் கையில் கொடுப்பார். அதை எடுத்துக் கொண்டு பூசாரி ஒன்னரை கல் தொலைவில் இருக்கும் ஆற்றிற்குச்
சென்று ஏழு ஊற்று நீரைக்கொண்டு வருவார். அவ்வாறு பூசாரி அருளோடு ஆற்றிற்குச் செல்லும் போது காவல்காரர்கள் தீவட்டித்தூக்கிக் கொண்டு பூசாரியை பின் தொடர்வார்கள். அவர்கள் வரும்வரை மக்கள் இருபுறமும் கைகோத்துக் கொண்டு பூசாரி செல்ல வழிவிட்டு நிற்பர். பூசாரி
ஒன்னரைக் கல் தொலைவில் உள்ள ஆற்றிற்கு எத்தனை மணித்துளிக்குள் சென்று திரும்புகிறார் என்று மக்கள் அனைவரும் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஏழு அல்லது எட்டு மணித்துளிக்குள் ஆற்றிலிருந்து கரகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவார். அவ்வாறு வரும்
போது யாரும் தூக்கத்தில் இருக்கமாட்டார்கள். தூங்கிக் கொண்டு இருக்கும் கைக்குழந்தையைக் கூட கையில் தூக்கி வைத்துக் கொள்வர். கருவுற்ற மங்கையர் கரகத்தின் முன் போகமாட்டார்கள்.
அவ்வாறு கரகச் செம்பை ஆற்றிலிருந்து கொண்டு வரும் போது ஒரு புதுமை நடந்ததாகச் சொல்லப்படுகிறது. தற்போது உள்ள பூசாரியின் முப்பாட்டார் ஷஷசதுரகிரி பூசாரி|| அவர்கள் கரகத்தை ஆற்றிலிருந்து கொண்டு வருகையில் வழியில் தண்டவாளத்தில் புகைவண்டி வந்த போது அதைத் தாவிக் கரகச் செம்பைக் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது.ஆற்றிலிருந்து ஏழு ஊற்று நீர், மூன்று கைபிடிமண் கொண்டு வந்து பூசாரி வீட்டில் கொடுத்த
பின்பு அங்கு பெரிய காவல் வகையறாவை சேர்ந்தவர்கள் கரகம் ஜோடிக்கிறார்கள். மட்டை உறிக்காத முக்கால் பருவத் தேங்காயை அறுவாளால் சீவி செம்பிற்குத் தகுந்தது போல் அமைக்கப்பட்டு பூக்களால் சோடிக்கப்படும்.
பூசாரி கரகச் செம்பை பூசாரி வீட்டில் கொடுத்த பின்பு பூசாரி வீட்டிலிருந்து கோயிலுக்கு வந்து அம்மன் காலடியில் உள்ள சூலத்தை எடுத்து பின்பு சாவடிக்குக் கொண்டு வந்து சாவடியில் அமர்ந்திருக்கும் எழுந்தருளிய நாயகியிடம் வைத்து விட்டு அடுத்த படியாக பூசாரி பெண்மைத் தோற்றத்தில் பூசாரியின் மீசையை மழித்துப் பெண் கோலத்தை ஏற்பார். சாவடியிலிருந்து பூசாரி மேளங்கள் கொட்ட சூலத்தை எடுத்துக்கொண்டு பூசாரி வீட்டிற்கு
வருவார்.
அப்பொழுது முன் வாசலில் தலைபலகை ஒன்றை வைத்து அதன் மேல் பூசாரியின் காலை வைத்து பூசாரியின் தாயார் ஆரத்தித் தட்டுடனும், தண்ணீர்ச் செம்புடனும் வந்து பூசாரியின் காலைக் கழுவி விடுவார். ஆரத்தி எடுத்த உடன் பூசாரியைக் வீட்டிற்குள் அமர்த்துவர்.சூலத்தைப் பூசாரியின் வலப்பக்கத்தில் நிறுத்தி அவர் முன்பு தானியங்களைக் கொட்டிப் பரப்பப்படும். பரப்பப்பட்ட தானியத்தின் மீது கரகத்தை அம்மனின் அருளுடன் இறக்கிப் பூசாரி வைப்பார். பின்னர் பூசாரியின் களைப்பைப் போக்குவதற்காக இடது பக்கம் மூன்று கலையத்தில் மதுபால் ஊற்றி வைக்கப்படும். பூசாரியின் களைப்பைப் போக்குவதற்காக கோழி, சேவலை அறுத்துச் சோற்றைப் படைத்துப் பூஜை செய்யப்படும்.பின்பு கரகத்தைப் பூசாரியும், கரகம் எடுத்துக் கொடுக்கும் ஊர் நாட்டாண்மை சூலத்தையும் தூக்கி வருவர். சாமியாடியும், மதுக்கரமும் கூட வரும். மதுக்கரகத்தை பூசாரி வீட்டுப்பெண்கள்
நாட்டாண்மை வகையறா சீர்பாதம் வகையறாவைச் சேர்ந்த கன்னிப் பெண்கள் தூக்கி வருவார்கள்.புலால் உணவையும் ஒருவர் சுமந்து கொண்டு வருவார். இந்நிகழ்ச்சி பூசாரி வீட்டிலிருந்து கோயிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்நிகழ்ச்சி நடந்து முடிக்க அதிகாலையாகி விடும்.கரகத்தைப் பூசாரி எடுத்துச் செல்லும் போது தலையிலிருந்து கரகம் விழாமல் இருக்க திருநீற்றைப் போட்டுப் போட்டு நிற்க வைப்பர். பூசாரி அருளுடன் இருப்பார். நாட்டாண்மை,பூசாரி, கருப்பு சாமியாடி ஆகியோர்களிடம் திருநீறு வாங்குவதற்கு மக்கள் திரண்டு வருவர்.இவர்களுடன் மக்கள் மாவிளக்கு, முளைப்பாளிகை, ஆயிரம் கண்பானை போன்றவற்றைஎடுத்துக் கொண்டு உடன் வருவர். மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவர்களுடன்
கோயிலுக்குச் செல்வர். அம்மனின் உலா திருமேனியையும் உடன் கோயிலுக்கு எடுத்துச் செல்வர்.பின்பு அனைவரும் முத்துநாயகிஅம்மன் கோயிலை மூன்று முறை சுற்றி வருவர். அம்மனின் உலாமேனியை கோயில் கருவறையில் வைத்த உடன் கொண்டு சென்ற புலால் உணவைப்
பூசாரி காவல்காரர் முதலியோர் களைப்புத்தீர உண்பர்.