காப்பு கட்டிய நாளில் இருந்து தொடர்ந்து பனிரெண்டு நாள் சிறப்பாக விழாக்கள்
கொண்டாடப்படும். பனிரெண்டாம் நாள் திருவிழா முடிவடைகிறது.
செவ்வாய் காப்புக்கட்டும் நாளிலிருந்து அம்மன் பன்னிரண்டு நாட்கள் உலாவரும். முதல்
மூன்று நாட்கள் அம்மன் இருக்கும் திருக்கோயிலைச் சுற்று வலம் வரும். வெள்ளிக்கிழமை
முதல் அம்மன் ஊருக்குள் உலா வருவாள். முன்பு அம்மன் உலா செல்வதற்காகச் சிறிய
சப்பரம் இருந்தது. அதில் வைத்துக் கட்டித் தோளில் தூக்கி கொண்டு செல்வர். நாளடைவில்
நிலை மாறியதால் வண்டி செய்யப்பட்டு அம்மன் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
ஊர்காவல்காரர்கள் தீவெட்டி ஏந்தி வருவார்கள். அப்பொழுது ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
குத்துவிளக்கு ஏற்றி வைத்து தேங்காய் பழம் வைப்பர். பின்பு பூசாரி வந்து தேங்காயை
உடைத்து அம்மனுக்குப் படைப்பார்.
வெள்ளி முதல் அடுத்த வெள்ளி வரை எட்டு நாள் மண்டகப்படி முறை வைத்து
ஒவ்வொரு மண்டகப்படிதாரர்களும் அம்மனைச் சப்பரத்தில் ஜோடித்து உலா வரச் செய்வர்.
அன்று அந்தந்த வகையறா மண்டகப்படி மக்களின் முறையாகக் கருதப்படுகிறது.