முத்துநாயகிஅம்மன் திருக்கோயில் தோற்றம்

முத்துநாயகி அம்மன் திருக்கோயில் பரவை ஊரில் தோற்றம் பெற்ற வரலாற்றை கள ஆய்வினால் உணர முற்பட்டபோது, எப்போதோ ஒரு காலத்தில் தற்போது முத்துநாயகிஅம்மன் திருக்கோயில் அமைந்திருக்கும் இடம் வேளாண்மை நிலமாக இருந்தது. நிலத்தை ஏர் பூட்டி உழுது கொண்டிருந்த பொழுது கலப்பையின் கொழுவை ஏதோ ஒன்று தடுத்து நிறுத்தியது. கலப்பை பூட்டப்பட்ட மாடுகள் நகர முடியாமல் நின்றன. நிலத்தைக்குத்திய கொழுப்பகுதியிலிருந்து குருதி கொப்பளித்து வெளிப்பட்டது. இதை கண்ட பொதுமக்கள் அவ்விடத்தை தோண்டினர்.
அவ்விடத்தில் அம்மனின் திருவுருவச்சிலை ஒன்று தோன்றி இருந்தது தெரியவந்தது. அத்தகைய நிலையில் அவ்விடத்தில் மேடாக மேடையை உருவாக்கிக் கோயில் என்று வழிபாட்டுக்கு வந்தது எனத் தெரிய வருகிறது

 

முத்துநாயகிஅம்மனின் திருமேனி

 

அம்மன் கருவறையில் அமர்ந்துள்ளது. அமர்ந்திருக்கும் அம்மனின் இடது கால் அசுரனை மிதித்த கோலத்தில் உள்ளது. வலது காலை மடித்து இருக்கையில் அமர்ந்துள்ளது. அம்மன் எட்டு கைக் கொண்டு காட்சி அளிக்கிறாள். அம்மன் வலக்கையின் மேற்கையில் சாட்டையும் , அடுத்த கீழ்க்கையில் சிலம்பையும் அடுத்த கீழ்க்கையில் குடத்தையும் பெற்றுள்ளன. அம்மனின் இடது கையின் மேற்கையில் குத்துவாள் கீழ்நோக்கி குத்தும் நிலையில் உள்ளது. இதனை அடுத்து கீழ்க்கை உடுக்கையை வைத்துள்ளது. அதனை அடுத்த கீழ்க்கை குத்து வாளினையும், அடுத்த கை ஒலியிடும் மணியையும் பெற்றுள்ளன. அம்மனின் தலையின் பின்புறம் தீப்பிழப்யுடன் மகுடத்துடன் விளங்குகின்றது. அம்மனின் முகம் அமரிய (அமைதியாக) முகத்தினளாக அனைவரையும் பார்க்கும் கோலம் கொண்டு சாந்தமாக அருள்பாளிக்கிறாள்.